தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வரும் 3-ம் தேதி வரை ஆலந்தூர் நீதிமன்றம் காவல் நீடிப்பு செய்துள்ளது.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்புறம் இருந்த கொடிக்கம்பத்தைக் கடந்த 21-ம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதற்கு, பா.ஜ.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். மேலும், காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு, கொடிக் கம்பத்தை அகற்றாமல் பாதுகாத்தனர். ஆனாலும், ஜே.சி.பி. மூலம் கொடிக்கம்பத்தை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.
மேலும், ஜேசிபி வாகனத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி, தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அமர் பிரசாத் ரெட்டியை மேலும் 2 வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த முதல்வர் படத்தை அகற்றியதாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு வழக்கில் நவம்பர் 10 -ம் தேதி வரை அமர் பிரசாத்துக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஒரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி-க்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மற்றொரு வழக்கில், தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுப்பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு நவம்பர் 3 -ம் தேதி வரை ஆலந்தூர் நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்துள்ளது.