பூபேஷ் பாகல் ஒரு ப்ரீ பெய்டு முதல்வர். பணம் தீர்ந்துபோனால் எப்படி ப்ரீ பெய்டு சிம்கார்டு வேலை செய்யாதோ, அதேபோல இந்த முதல்வர் பதவிகாலமும் பணம் தீர்ந்து விட்டால் முடிந்து விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆகவே, இரு கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மாநில பா.ஜ.க. அலுவலகமான குஷாபாவ் தாக்கரே வளாகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமித்ஷா, விஜய் சங்கல்ப மெகா பேரணியில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பூபேஷ் பாகல் சத்தீஸ்கர் மக்களை சூறையாடுகிறார். தனது அரசியலை வளர்க்க நினைப்பவரால் சத்தீஸ்கர் மாநிலத்தின் நலனை செய்ய முடியாது. மேலும், பாகல் காங்கிரஸ் கட்சியின் ‘ப்ரீ பெய்டு முதல்வர்’. பணம் தீர்ந்து விட்டால் எப்படி ப்ரீ பெய்டு சிம்கார்டு வேலை செய்யாதோ, அதேபோலத்தான் இந்த முதல்வர் காலமும். பணம் தீர்ந்து விட்டால் வேலை செய்ய மாட்டார்.
நீங்கள் அனைவரும் வாக்களிக்கச் செல்லும்போது, எம்.எல்.ஏ.வைத் தேர்ந்தெடுக்கவோ, எம்.எல்.ஏ.வை அமைச்சராக்கவோ வாக்களிக்காதீர்கள். உங்கள் வாக்கு சத்தீஸ்கரின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. ஆகவே, நக்ஸலிசத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, ஆதிவாசிகளையும் மாநிலத்தையும் வளர்ந்த பிரதேசமாக மாற்ற வேண்டும் என்பதற்கானதாக உங்கள் வாக்கு இருக்க வேண்டும்” என்றார்.