இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், “காங்கிரஸ் கட்சி 5 மாநிலத் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. கூட்டணியை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் பகுதிக்கு யாராவது ஒரு பாவத்தை செய்திருப்பார்களேயானால், அது காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்கும்” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்து குறித்து கூறுகையில், “இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது. இதை பீகார் முதல்வர் நிதீஷ் குமரே உறுதிப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இதற்கு முன்பும் இப்படித்தான் இருந்தது. அவர்களுக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. தங்களது குடும்பத்தைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார்கள். சோனியா காந்தியைப் பொறுத்தவரை, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோரை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்.
அதேபோல, முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது மகன் சிந்த்வாரா தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் நகுல் நாத்தை முன்னிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். மேலும், மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் திக்விஜய் சிங்கும் தனது மகன் ராகோகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெயவர்தன் சிங்கை முன்னிலைப்படுத்துவதில்தான் மும்முரமாக இருக்கிறார்.
எது எப்படியோ இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது என்பது மட்டும் உண்மை. அதேபோல, காங்கிரஸ் கட்சியும் சிதைந்து கொண்டிருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்துக்கும் எந்த நன்மையையும் செய்யாது, செய்ய முடியாது. அதோடு, கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் சினிமாவில் வரும் ஷ்யாம், சேனு இரட்டையர்களைப் போல தங்களது பதவிக்காக அடித்துக் கொள்கிறார்கள்” என்றார்.