ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் லாங்ரூட் நகரம் இருக்கிறது. இங்கு, தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும் விரைந்தனர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 27 பேர் உயிரிழந்தனர். 21-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இறந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்திருக்கிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதை மறுவாழ்வு மையத்தின் மேலாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான கார் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.