சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பா.ஜ.க. அறிவித்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டிருக்கிறார். ‘மோடியின் வாக்குறுதிகள்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இத்தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் சில முக்கியமான வாக்குறுதிகளை பார்ப்போம்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும். ஏழை மக்கள் இராம ஜென்ம பூமிக்கு பயணம் செய்ய ராம் லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும். நெல் குவிண்டாலுக்கு 3,100 ரூபாய் என்கிற விலையில் கொள்முதல் செய்யப்படும். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் 10,000 ரூபாய் உதவி வழங்கப்படும்.
ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு 500 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தல் அறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறோம். எங்களது தேர்தல் அறிக்கை வெறும் தேர்தல் அறிக்கை அல்ல, அது எங்களுக்கான தீர்மானக் கடிதம். சத்தீஸ்கரில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பி.எஸ்.சி) தேர்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும். கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பயணப்படி கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமித்ஷா, “நாங்கள் ஓட்டு அரசியல் செய்யவில்லை. விவாதித்து உரிய முடிவை எடுப்போம். பா.ஜ.க. ஒருபோதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. ஆனால், சரியான முறையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி கடன் தள்ளுபடிக்கு பதிலாக, அதிக ஊழல் செய்து பணத்தை கொள்ளையடித்தனர்.
ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கும். மக்கள் பல அளவுகோல்களின் அடிப்படையில் அரசுக்கு வாக்களிக்கின்றனர். நக்சல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு நிலை எல்லாமே பிரச்சனைகள் என்று நான் நம்புகிறேன். அனைத்து பிரச்சனைகளையும் நாங்கள் தீர்த்து வைப்போம்.
பொய்யான விளம்பரங்களில் பூபேஷ் பாகேலை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். போலி சி.டி.க்கள், போலி பென்டிரைவ்கள் தயாரித்தல், செய்தித்தாளில் போலிச் செய்திகளைப் புகுத்துதல் என சாதனை படைத்தவர். இதன் மூலம் ஆட்சியைப் பிடித்தார். காங்கிரஸ் கொள்கைகளை மட்டுமே உருவாக்கியதே தவிர, வருமானத்தை அதிகரிக்கவில்லை. நாங்கள் கொள்கைகளுடன் வருவாயையும் அதிகரிப்போம். அதேசமயம் கடன் அதிகரிக்காது” என்றார்.