உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்குக் கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் என வெளி மாநில பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் மண்டல – மகரவிளக்கு சீசன் நடை திறப்பு நடைபெற உள்ளது. அதன்படி, சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை வரும் 17 -ம் தேதி தொடங்குகிறது. இதற்காகத் திருக்கோவில் நடை வரும் 16 -ம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. அன்று முதல் தொடர்ந்து 41 நாட்கள் சபரிமலையில் நடை திறந்திருக்கும். அதன் பிறகு 27 -ம் தேதி இரவு நடை சாத்தப்படும்.
பின்னர், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30 -ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31 -ம் தேதி முதல் 2024 -ம் ஆண்டு ஜனவரி 15 -ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.
தொடர்ந்து 19 -ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். 20 -ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பிறகு திருக்கோவில் நடை சாத்தப்படும். அன்றைய தினத்துடன் மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவு பெறுகிறது.
இந்த தகவலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.