உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்திருக்கிறது தாஜ்மகால். சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த தாஜ்மகால் முழுக்க முழுக்க பளிங்குக் கற்களால் பதிக்கப்பட்டிருக்கிறது. 7 உலக அதிசயங்களில் தாஜ்மகாலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த தாஜ்மகால் முகலாய அரசர் ஷாஜஹான், தனது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியதாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறது. இதைத்தான் மாணவர்கள் அனைவரும் இன்று வரை படித்து வருகிறார்கள்.
ஆனால், தாஜ்மகால் குறித்த சர்ச்சை நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. அதாவது, தாஜ்மகால் முகலாய அரசர் ஷாஜஹானால் கட்டப்படவில்லை. அது இந்து மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. முகலாயர்களின் ஆட்சியின்போது, ராஜா மான் சிங்கிடம் அபகரிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த அரண்மனையை ஷாஜஹான் புதுப்பித்தார். ஆகவே, தாஜ்மகாலில் ஆய்வு நடத்தினால் இந்த உண்மை வெளிவரும் என்று இந்துக்கள் தரப்பில் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், தாஜ்மகாலின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். அதன் உண்மையான வரலாற்றை கண்டறிவதற்கான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்று ஹிந்து சேனா அமைப்பு தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில், “தாஜ்மஹால் முதலில் ராஜா மான் சிங்கின் அரண்மனை. பின்னர் ஷாஜஹானால் புதுப்பிக்கப்பட்டது.
ஆகவே, தாஜ்மஹால் தொடர்பான தவறான வரலாறை புத்தகங்களில் இருந்து அகற்ற தொல்லியல்துறை, மத்திய அரசு, இந்திய தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். தாஜ்மகாலின் வயது, ராஜா மான் சிங்கின் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி துஷார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாஜ்மகால் தொடர்பாக ஆய்வு நடத்தும்படி மத்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக இந்து சேனா அமைப்பு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தது. இதனையும் மத்திய தொல்லியல் துறையிடம் கோரிக்கை மனுவாக அளிக்கும்படி பரிந்துரை செய்திருந்தது. இதனை மேற்கோள் காட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.