மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டமன்றத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்காக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அதிகளவில் பணம் கொடுத்திருப்பதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அம்மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த அசிம் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில் 5.39 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அசிம் தாஸ் என்கிற இடைத்தரகா் ராய்பூரில் 5.39 கோடி ரூபாய் ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இப்பணம் மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் சத்தீஸ்கர் மாநிலத் தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பப்பட்ட பணம் என்கிற சந்தேகம் நிலவுகிறது. அசிம் தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரது செல்போனில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு ஆகியவை சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கின்றன.
பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள 15.59 கோடி ரூபாய் சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, பண விவகாரம் தொடர்பாக செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உட்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.