சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, தன்னை ஓவியமாக வரைந்து கொடுத்த சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும், நன்றியும் தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, பரிசீலனையும் நிறைவடைந்து விட்டது.
இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில், அம்மாநிலத்தின் கன்கேர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி பிரதமர் மோடியின் ஓவியத்தை தனது கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட பிரதமர் மோடி, அச்சிறுமியிடமிருந்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உடனடியாக ஓவியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும், அந்த ஓவியத்திலேயே அச்சிறுமியின் வீட்டு முகவரியை எழுதிக் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதோடு, தான் அச்சிறுமிக்கு நிச்சயமாக கடிதம் எழுதுவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது, அச்சிறுமி கான்கேர் பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், அச்சிறுமிக்குக் கடிதம் எழுதி பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். சிறுமிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- “அன்புள்ள அகன்ஷாவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள். கான்கேரின் கூட்டத்தில் நீங்கள் கொண்டு வந்த ஓவியம் என்னை அடைந்தது. இந்த அன்புக்கு மிக்க நன்றி. இந்தியாவின் மகள்கள் நாட்டின் பிரகாசமான எதிர்காலம்.
உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெறும் இந்த பாசமும் சொந்தமும் தேச சேவைக்கு எனது பலமாகும். நமது மகள்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் அனைத்தும் நிறைந்த தேசத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். நீங்கள் சிறந்த வெற்றியுடன் முன்னேறி, உங்கள் வெற்றிகளால் உங்கள் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்கட்டும். உங்கள் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்.
அடுத்த 25 ஆண்டுகள் உங்களைப் போன்ற இளம் மகள்களுக்கு முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டுகளில், நம் இளம் தலைமுறை, குறிப்பாக உங்களைப் போன்ற மகள்கள், அவர்களின் கனவுகளை நிறைவேற்றி, நாட்டின் எதிர்காலத்திற்கு புதிய திசையை வழங்குவார்கள். சத்தீஸ்கர் மக்களிடம் நான் எப்போதும் மிகுந்த அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டின் முன்னேற்றப் பாதையில் மாநில மக்களும் ஆர்வத்துடன் பங்களித்துள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.