தற்போது இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவற்றில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்கள். மேலும், பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது வெறும் சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகும். இந்திய மக்கள் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க விரும்புகிறார்கள்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் நேர்மை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. கடந்த 10 வருடங்களில் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சி விகிதம், நாட்டின் வளர்ச்சி விகிதத்திற்கு இணையாக உள்ளது. நாட்டிலேயே அதிக தொழில்துறை கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.
காங்கிரஸ் ஆட்சியின் போது வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா பலவீனமான நாடு என்று கூறுவார்கள். ஆனால், தற்போது இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது. இன்றைய இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது.
1947-ம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தை காங்கிரஸ் அரசு ஆண்டது. இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் மத்தியப் பிரதேசத்தை வளர்க்க முடியவில்லை. ஆனால், கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்த்து, உங்கள் முன்பு பா.ஜ.க. ஆட்சி நிருபித்திருக்கிறது” என்றார்.