காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம்தான். பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும், 17-ம் தேதியும் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்கலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் ஜஷ்பூர் மாவட்டம் ராய்கரில் உள்ள லைலுங்காவில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அவரை வரவேற்க கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, நட்டா பாரம்பரிய டிரம்மை வாசித்து மகிழந்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய நட்டா, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல் 3,100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். பெண்களுக்கு ஆண்டுக்கு தலா 12,000 ரூபாய் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 1 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி சுரங்கம் மற்றும் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கிறது.
பொய்களைச் சொல்லி காங்கிரஸ் ஊழல் செய்கிறது. காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம், வஞ்சகம். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஊழல் இருக்கும் என்பதுதான் அவர்களின் அடையாளம். ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது.
பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, 2027-28-ம் ஆம்டுக்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்” என்றார்.