காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் தைரியமடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
90 தொகுதிகள் கொண்டு சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சூரஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கற்று உரையாற்றினார். அப்போது, மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகேலை அவர் கடுமையாக சாடினார்.
30 சதவீத கமிஷன் அரசாங்கம், வெளிப்படையாக பந்தயம் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல்வருக்கு ரூ.500 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொலைக்காட்சியில் கூறிய பின்னரும் வேறு ஆதாரம் தேவையில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பயங்கரவாதிகளும், நக்சலைட்டுகளும் உற்சாகமடைகின்றனர். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் குற்றம், கொள்ளை ஆட்சிதான் நடப்பதகாவும் மோடி குறிப்பிட்டார்.
வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் நிழலில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது, உங்கள் மகன் மாலையில் வீடு திரும்பவில்லை, அவரது உடல் வந்து சேரவில்லை என்றால், அந்த பணம் இருந்தும் என்ன பயன் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார். நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு பணியை கொடுத்துள்ளீர்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.