இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எலன் மஸ்கிற்கு சொந்தமான அமெரிக்க EV வாகன நிறுவனமான டெஸ்லாவின் நிலுவையில் உள்ள முதலீட்டு திட்டங்களை 2024 ஜனவரிக்குள் விரைவுபடுத்துமாறு அமைச்சகங்களுக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் அலுவலகம் சமீபத்தில் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியின் அடுத்த கட்டம் தொடர்பான கூட்டங்களை நடத்தியது, அதில் டெஸ்லாவின் நிலுவையில் உள்ள முதலீட்டு திட்டமும் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில் டெஸ்லாவின் உத்தேச முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் மஸ்க் இடையே ஜூன் 2023 சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா அதிகாரிகள் நீண்ட காலமாக இந்தியா தனது சந்தையை EV நிறுவனத்திற்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். டெஸ்லா தனது விநியோகச் சங்கிலி சூழலை இந்தியாவில் மேம்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.
அண்மையில் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி டெஸ்லாவை இந்தியாவிற்கு வரவேற்கிறோம். இந்தியா ஒரு பெரிய சந்தையாக உள்ளது, இங்கு அனைத்து வகையான விற்பனையாளர்களும் உள்ளனர். உள்நாட்டில் உற்பத்தி செய்தால், சலுகைகள் கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.
முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களுக்கான இறக்குமதி வரியை 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க டெஸ்லா முயற்சிக்கிறது. இந்த சிக்கலை தீர்க்க, இந்தியா ஒரு புதிய ஏற்பாட்டை உருவாக்கியுள்ளது, குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு உகந்த EV களுக்கு, இறக்குமதி வரியில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.