மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ளது அயன்பாப்பாகுடி. இந்த பகுதியில் நேற்று இரவு முதல் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால், வெள்ளக்கல் குப்பைக் கிடங்கிலிருந்து கழிவுநீர் வெள்ளமென வெளியேறி வருகிறது. மேலும், இந்த பகுதியில் சுற்று வட்டாரத்தில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீரும் இங்குள்ள கண்மாயில் அப்படியே கலக்கிறது. இந்த கண்மாயிலிருந்து அருகில் உள்ள மறுகால் ஓடையில் நீர் பாய்ந்தோடுகிறது.
இதனால், பஞ்சு போன்ற வெள்ளை நுரை உருவாகியுள்ளது. இவ்வாறு உருவாகும் நுரை மலைபோல் குவிந்து வருகிறது.
மேலும், இந்த நுரையானது காற்றில் பறந்து, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது. இதனால், சாலைகளில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.