சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்கிறார்கள்.
சட்டமன்றத்தின் பதவிகாலம் நிறைவடையவிருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மிசோராம் மாநிலத்துக்கு கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல, 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்துக்கு முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து, வரும் 17-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்திலும், 25-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலும், 30-ம் தேதி தெலங்கானா மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
எனவே, இம்மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வாரம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, வரும் 15 மற்றும் 18-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். 15-ம் தேதி பார்மெர் மாவட்டத்தில் உள்ள பெய்டூ என்கிற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். தொடர்ந்து, 18-ம் தேதி பாரத்புர் மற்றும் நகாயுர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதேபோல, வரும் 16-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டோங்க் மாவட்டத்தில் உள்ள தியோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹக், பிம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் பேசுகிறார். மேலும், 18-ம் தேதி அஜ்மிர் மாவட்டத்தில் நடைபெறும் 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
மேலும், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா 16-ம் தேதி தௌசா, ஜோத்பூர் மற்றும் ஜெய்சால்மர் மாவட்டங்களில் பிசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, ஜெய்ப்பூரில் 16-ம் தேதி பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இவர்கள் தவிர, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜெய்ப்பூரில் நாளை கட்சித் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.