ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து நோயாளிகளை கேடயமாகப் பயன்படுத்துவதாக, இஸ்ரேல் இராணுவம் வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. வான்வழி, கடல்வழி, தரைவழி என மும்முனைத் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இத்தாக்குதலில் சுமார் 10,000 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கியத் தீவிரவாத முகாம்களையும் இஸ்ரேல் இராணுவம் தரைமட்டமாக்கி இருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் பலரையும் அழித்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர்.
இதன் காரணமாக, ஹமாஸ் தீவிரவாதிகள் மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கூறிவருகிறது. வடக்கு காஸாவிலிருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு காஸா நகர மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்தபோதிலும், அவர்களை இடம்பெயர விடாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து வருகின்றனர்.
அதேபோல, மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்பதால், ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைகளுக்கு அடியில் சுரங்கம் அமைத்து, மறைந்திருந்து இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து, மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
ஆனால், பாலஸ்தீன அரசும், மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகளும், ஹமாஸ் தீவிரவாதிகளும் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்தனர். இந்த நிலையில், காஸாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கப்பாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருந்தது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கிறது.
6 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு சுரங்கப்பாதையை அதிகாரி ஒருவர் கண்டுபிடிக்கிறார். பின்னர், அந்த சுரங்கத்தின் வழியே உள்ளே செல்கிறார். அந்த சுரங்கத்தின் மறுபக்க வழி ரன்டிசி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது. இதை அந்த அதிகாரி விளக்குகிறார். இதேபோல, காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையிலும் சுரங்கப்பாதை உள்ளது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.