மாணவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உட்பட பல்வேறு சிறப்பு அறிவிப்புகளுடன் தயாராகி இருக்கும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 16-ம் தேதி வெளியிடுகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, மக்களைக் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சி ஏராளமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. எனவே, அதை விட சிறப்பான தேர்தலை அறிக்கையை தயாரிக்க பா.ஜ.க. ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. இக்குழுவில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஒருங்கிணைப்பாளர் கன்ஷ்யாம் திவாரி, இணை ஒருங்கிணைப்பாளர் கிரோடி லால் மீனா, மத்திய அமைச்சர் அல்கா சிங் குர்ஜார், முன்னாள் துணை சபாநாயகர் ராவ் ராஜேந்திர சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சுபாஷ் மஹரியா, பிரபுலால் சைனி, ரகில் ரத்தோர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் மாநிலம் முழுவதிலும் விண்ணப்பப்படிவங்களை வழங்கி சுமார் 1 கோடி பேரிடமிருந்து பரிந்துரைகளை சேகரித்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஆதரவு, மத ஸ்தல மேம்பாட்டிற்கான தேவநாராயண் திட்டத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்கிறார்கள்.
மேலும், மாணவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, உஜ்வாலா மற்றும் லாட்லி திட்டங்களின் கீழ் வரும் குடும்பங்களுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது உட்பட 60-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த தேர்தல் அறிக்கையை ராஜஸ்தானில் 16-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிடுகிறார்.