சத்தீஸ்கரில் சட்டசபைத் தேர்தல் முதல் கட்டமாகக் கடந்த நவம்பர் 7-ம் தேதி நடைபெற்றபோது, மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில், தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி எச்சரிக்கை விடுத்தனர். உச்சக்கட்டமாக, பாதுகாப்புப் படையினர் மீதும், தேர்தல் அதிகாரிகள் மீதும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு மாவோயிஸ்ட் வேட்டை நடத்தப்பட்டது.
இதனால், அடுத்த சில நாட்களில் கேரளாவில் உள்ள வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் குழு பதுங்கியது. இந்தக் குழுவை அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தெலங்கானாவைச் சேர்ந்த கணேஷ் உய்கி இலியாஸ் அனுமந்து என்பவர் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா 2013 -ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்களால் கொல்லப்பட்ட வழக்கிலும் இவருக்குத் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் இவரிடமே உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, கேரள மாநிலம் பனசுரா மற்றும் கபனி பகுதிகளில் 18 மாவோயிஸ்ட்கள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால், கேரளாவில் மாவோயிஸ்டுகள் மீண்டும் தலை தூக்கி உள்ளதாக பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, தேச விரோத அமைப்புகள், அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் கேரளாவில் சுதந்திரமாக நடமாடி வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது, மாவோயிஸ்டுகளும் சேர்ந்துள்ளனர். தீவிரவாதிகளை அடக்க கேரள அரசு என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை.