மியான்மரில் புதிய வன்முறை வெடித்த பிறகு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கலம் தேடி மிசோரமுக்கு வந்துள்ளனர்.
மியான்மர் ராணுவம் திங்கள்கிழமை சின் மாநிலத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து 5,000க்கும் அதிகமான மியான்மர் நாட்டவர்கள் மிசோரமுக்கு வந்துள்ளதாக அம்மாநில காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் லால்பியாக்தங்கா கியாங்டே தெரிவித்துள்ளார்.
தற்போது மியான்மர் எல்லையில் உள்ள இரண்டு மிசோரம் கிராமங்களில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஐஸ்வாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
மிசோரம் காவல்துறையின் முன் 42 மியான்மர் ராணுவ வீரர்கள் சரணடைந்துள்ளதாகவும், அவர்கள் அசாம் ரைபிள்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மிசோரம் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
மக்கள் பாதுகாப்புப் படை (PDF) இந்திய எல்லைக்கு அருகில் உள்ள சின் மாநிலத்தில் உள்ள கவ்மாவி மற்றும் ரிஹ்காவ்தார் ஆகிய இரண்டு இராணுவத் தளங்களைத் தாக்கிய பின்னர் சண்டை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
மியான்மர் ராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்த மியான்மர் நாட்டவர் பலர் சர்வதேச எல்லையைத் தாண்டி மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் நுழைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலத்தில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான அகதிகள் தஞ்சம் புகுந்தனர். மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு 2021இல் ஆட்சி கவிழ்ப்பு மூலம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டு வருகிறது.