மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிகாலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, மிசோராம் மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தலும் கடந்த 7-ம் தேதி நடந்து முடிந்தன. மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் வருகிற 17-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்துக்கு வருகிற 25-ம் தேதியும், தெலங்கானா மாநிலத்துக்கு வருகிற 30-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 17-ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. ஆகவே, இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் மேற்கண்ட இரு மாநிலங்களிலும் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.