வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை தொடர்பான நிகழ்ச்சியை கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திரடி மோடி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரையை இன்று தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், நடைபெற்ற இந்த யாத்திரை (‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’) தொடர்பான நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கோத்தகிரியைச் சேர்ந்த, 17 விவசாயிகளுக்கு, மத்திய அரசின் விவசாய பயிர் கடனுக்கான காசோலைகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார். அதைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்கான மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் விழிப்புணர்வுக் கையேடுகளை அவர் வெளியிட்டார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஷேக் மீரா, நபார்டு வங்கி அதிகாரிகள், வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் போது ஜார்க்கண்டில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விவசாயிகளுக்கு சிறுதானிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, மாணவர்களின் நடன நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக, பிரதமர் இன்று இந்த யாத்திரையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத், ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம், விஸ்வகர்மா திட்டம் போன்ற மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், இத்திட்டங்களின் பயனாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வகையில் இந்த யாத்திரை அமையும் என்று கூறினார்.
தமிழகத்தை பொறுத்தவரை, இந்த யாத்திரையில், 20 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ள இந்த யாத்திரை, முதல் கட்டமாக, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடைபெறுகிறது. இது ஜனவரி 25-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தின் ஏற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் பொது மேலாளர், இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் தேன்மலை அத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மண் வள அட்டை மற்றும் வேளாண் கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.