மத்திய அரசு நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்காமல் ஏன் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் விதமாக ராஞ்சியில் பிர்ஷா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு “வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 ” என்ற தலைப்பில் பழங்குடியினருக்கான திட்டங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி பாரதப் பிரதமர் தலைமையில் துவங்கப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பழங்குடியினருக்கு திட்ட பயன்களை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசி மத்திய இணையமைச்சர் எல் முருகன்,
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எம்எல்ஏக்களுக்கோ, எம்பிக்களுக்கோ, இங்குள்ள அமைச்சர்களுக்கு மத்திய அரசு நிகழ்ச்சியில் பங்குபெறும் எண்ணம் இல்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருவதாகவும் அந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசுக்கு நேரமில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் எல்லாவற்றிலும் அரசியல், ஊழல் கொள்ளையடிப்பது லஞ்சம் வாங்குவது இதைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்.
மத்திய அரசு நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அந்தந்த மாநில அமைச்சர்கள், MP க்கள் கலந்து கொள்வது மரபாக உள்ளது .
மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் ஆனால் மாநில அரசு சார்ந்த யாரும் பங்கேற்பதில்லை இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் பேசியுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ஆட்சியர்களும் கலந்து கொள்வதில்லை என குற்றம் சாட்டினார்.
அதேபோல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிஸோரம் போன்ற மாநிலங்களில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அதேபோல் இந்தியா கூட்டணி அல்ல அது இந்தி கூட்டணி என்ன செய்வதென்று தெரியாமல் அகிலேஷ் யாதவ் சென்றுவிட்டார், கெஜ்ரிவால் என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியாக இருக்கிறார், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தனியாக இருக்கின்றனர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எப்போது வெளியே செல்வோம் என காத்திருக்கிறார் என்றார், இதுதான் இன்று இந்தியா கூட்டணியின் நிலைமையாக உள்ளதாக கூறினார்.