தெலங்கானா மாநிலத்தில் இம்மாதம் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வெளியிடுகிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7-ம் தேதி மிசோராம் மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, இன்று மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கும் 25-ம் தேதியும், தெலங்கானா மாநிலத்துக்கு 30-ம் தேதியும் தேர்தல் நடைபெறவிருக்கின்றன.
இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று வெளியிட்டார். இதில், 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், மாணவர்களுக்கு புத்தகம், பை வாங்க 1,200 உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்துக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் நாளை வெளியிடுகிறார். தொடர்ந்து, வாராங்கல், நால்கொண்டா, கத்வால் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் 4 பொதுக்கூட்டங்களில் பேசவிருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இக்கட்சி மீது தெலங்கானா மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். எனவே, இம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும், காங்கிரஸும் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றன.
ஆகவே, பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ராஜஸ்தான் மாநில தேர்தல் அறிக்கையைப் போலவே பல்வேறு கவர்ச்சிகரமாக அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.