தெற்கு உலக நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலகத் தெற்கு நாடுகளின் குரல் இரண்டாவது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தலைமை தாங்கினார்.
‘அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரின் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவோம்,’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில், குறிப்பாக கல்வித் துறையில் உள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ‘மனித வளத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்துதல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சர்கள் விவாதித்தனர்.
போட்ஸ்வானா, புருனே தாருஸ்ஸலாம், ஜார்ஜியா, துனிசியா, ஈரான், லாவோ பி.டி.ஆர், மலாவி, மியான்மர், பலாவ் குடியரசு, சாவோ டோமே மற்றும் பிரின்சிப், அல்பேனியா, மலேசியா, ஜிம்பாப்வே, கேமரூன் ஆகிய 14 நாடுகளின் அமைச்சர்கள், பிரமுகர்கள் இந்த அமர்வில் காணொலி முறையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தர்மேந்திர பிரதான் தனது தொடக்க உரையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகளாவிய தெற்கின் குரலை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஜி 20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை வழிநடத்துவதில், இந்தியாவின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். நெகிழ்வான, சமத்துவமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஜி20 புதுதில்லி தலைவர்களின் பிரகடனம் மனித மூலதன மேம்பாட்டில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் கற்றல் மற்றும் திறன் சூழலில் எவ்வாறு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதை தெரிவித்தார்.