சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததில் இந்தோ திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. சத்தீஸ்கரைப் பொறுத்தவரை, நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மாநிலம்.
எனவே, இம்மாநிலத்துக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, நக்சல்கள் நடமாட்டம் மிகுந்த பதற்றமான 20 தொகுதிகள் கண்டறியப்பட்டு கடந்த 7-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு அதிகாரிகள் சென்றபோது மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் இந்தோ திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார். அதேபோல, வெடிபொருளை செயலிழக்கச் செய்யும்போது குண்டு வெடித்ததில் மற்றொரு வீரர் காயமடைந்தார்.
இந்த நிலையில், இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, படே கோப்ரா வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களோடு அதிகாரிகள் புறப்பட்டனர். அப்போது, வாக்குச்சாவடியைக் குறிவைத்து நக்சல்கள் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை வீசினர்.
இச்சம்பவத்தில் இந்தோ திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஜோகிந்தர் சிங் உயிரிழந்தார். எனினும், வாக்குப்பதிவு இயந்திரம் கரியாபாத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. இத்தகவலை ராய்பூர் ரேஞ்ச் காவல்துறை தலைவர் ஆரிப் ஷேக் தெரிவித்திருக்கிறார்.