காவிரி நதிநீர் பங்கீடு விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் உள்ளது எனக் கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில், கர்நாடகா – தமிழகம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இயங்கிவரும், விழிப்புணர்வு கர்நாடகா, விழிப்புணர்வு இந்தியா என்ற அமைப்பின் தலைவர் கே.என்.மஞ்சுநாத் என்பவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவிரி பிரச்னை தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், காவிரி நதிநீர் பங்கீடு விசாரணையை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பிரசன்ன பி.வர்லெ மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் ஆகியோர் அமர்வு, பிற மாநிலங்கள் இடையிலான நதிநீர் பங்கீட்டு சட்டம் 1956 -ன் படி, நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்குக் கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே முழு உரிமை உள்ளது என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.