இஸ்ரேல் – ஹமாஸ் போரால் சிக்கித் தவிக்கும் காஸா நகர பொதுமக்களுக்கு 32 டன் உதவிப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் C17 விமானம் இன்று எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றனர்.
அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை, கப்பல்படை, காலாட்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு, மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
45-வது நாளை போர் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், 750-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட காஸா நகரில் 11,750 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தலைமையகம் உட்பட ஏராளமான தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.
அதேசமயம், இஸ்ரேல் போரால் காஸா நகரமே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடப்பதோடு, தண்ணீர் வசதி, மருத்துவ வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் பரிதவித்து வருகிறார்கள். எனவே, காஸா நகர வாசிகளுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் 32 டன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் விமானப்படை விமானம் எகிப்து நாட்டுக்குச் சென்றது.
இந்த நிலையில், 32 டன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் 2-வது விமானம் எகிப்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குகிறோம்.
இந்தியாவின் 2-வது MCC C17 விமானம் 32 டன் உதவிகளை ஏற்றிக் கொண்டு எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்குச் செல்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது! இந்திய விமானப்படையின் C-17 விமானம் கிட்டத்தட்ட 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் பாலஸ்தீன மக்களுக்கான 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிவாரணப் பொருட்களில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூக்கப் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.