ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஏராளமான ஊழல்களை செய்திருக்கிறது, ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. பா.ஜ.க.வை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “காங்கிரஸ் கட்சி நிலக்கரி ஊழல், சி.டபிள்யூ.ஜி. ஊழல், 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், அரிசி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்தது. வானையும் மண்ணையும் விட்டு வைக்கவில்லை.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால், இன்று 19,400 விவசாயிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது சகோதரர் மானிய உரத்தை ஏற்றுமதி செய்தார். அவருடைய குடும்பம், 11,000 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்பந்தங்களை எடுத்து, வீட்டை நிரப்பியது.
மேலும், அசோக் கெலாட் அரசு முதியோர் ஓய்வூதியத்தில் 450 கோடி ரூபாய் ஊழலை செய்திருக்கிறது. ஊழல் சாதனைகளை முறியடிக்கும் நபர்கள் இவர்கள்தான். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது.
பிரதாப்கர் சம்பவம், சுரு சம்பவம், பில்வாரா சம்பவம், தற்போதுதான் தௌசாவில் நடந்த சம்பவம். இந்த மேடையில் இருந்து பேசக்கூட முடியாத அளவுக்கு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகள் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார்.
இதில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 20 லட்சம் வீடுகள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கெலாட் அரசு 9 லட்சம் வீடுகள் கட்ட அனுமதிக்கவில்லை. ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் எங்கள் அரசு 20 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுக்கும்.
நாட்டில் இந்த தீபாவளிக்கு 55 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியா 3-வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு மேட் இன் சைனா என மொபைல் போன்களில் எழுதப்பட்டது. ஆனால் இன்று மேட் இன் இந்தியா என்று எழுதப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் கிடைக்கிறது. ஆனால், எங்கள் அரசு அமைந்தால் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கும். நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுக் கொள்கை தயாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும். நாங்கள் மோசடி செய்தவர்களை விசாரிப்போம். ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்றார்.