அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, அதை விரட்டுவதற்காக ஜெபக் கூட்டம் நடத்திய பெண் அதிகாரி கேரளாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் கே.ஏ.பிந்து. இவர், மேற்கண்ட அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, கிறிஸ்துவ மத பிரார்த்தனை நிகழ்ச்சியை (ஜெபக் கூட்டம்) நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், கலெக்டரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, துணை கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்துவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.
இதுகுறித்து மேற்கண்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறுகையில், “இந்த பிரார்த்தனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.
அலுவலகத்தில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவதற்காக, கிறிஸ்துவ மதத் தலைவர் ஒருவரின் அறிவுரையின்படி, இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், பிரார்த்தனையின்போது குறிப்பிட்ட சில வாசகங்களை உச்சரித்தால் வேலை நெருக்கடி, மனப்பதற்றம் குறையும் என்று கூறப்பட்டது.
இதன் காரணமாகவே அந்த பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதுவும் அலுவலக வேலை நேரம் முடிந்தது மாலை 5:30 மணிக்குத்தான் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. இதனால் அலுவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தரப்பு வாதத்தை கேட்காமல் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்து கூறுகையில், “நேற்று காலை அலுவலகத்துக்கு வந்ததும் சஸ்பெண்ட் உத்தரவு என்னிடம் தரப்பட்டது. அதில், உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்” என்றார்.