நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு, நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுத்தூணில் பகவத் கீதையின் ‘ஆன்மா அழியாதது’ என்கிற உபதேசம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, முப்படை தளபதி பிபின் ராவத், தனது மனைவி மதுலிகாவுடன் வருகை தந்தார்.
விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர்கள், சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் குரூப் கேப்டன் வருண் சிங் உட்பட 12 இராணுவ அதிகாரிகளும் சென்றனர்.
அந்த ஹெலிகாப்படர் திடீரென சூழ்ந்த மேகக்கூட்டங்கள் காரணமாக, நஞ்சப்பா சத்திரம் என்கிற கிராமத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து விழுந்து நொறுங்கியது.
இச்சம்பவத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் நினைவாக விபத்து நடந்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க வெலிங்டன் இராணுவ மையம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், நினைவுத் தூண் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த நினைவுத் தூண் 2-ம் ஆண்டு நினைவு தினமான வரும் டிசம்பர் 8-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது.
இந்த நினைவுத் தூணில், ‘ஸ்மிரிதிகா’ என்கிற தலைப்பில், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பகவத் கீதையின் 2:23 உபதேச வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இதற்குக் கீழே உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், ‘ஆன்மா அழியாதது. எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது. தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உலர்த்த முடியாது’ என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.