செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இந்தியர்களின் பாதுகாப்புக்கும், நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
கடந்த 17-ம் தேதி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பம் (AI) மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆகவே, மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், AI-ன் டீப் பேக் மற்றும் தவறான பயன்பாடு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “பிரதமர் ஒரு மிக முக்கியமான பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.
பிரதமர் சொல்வது மிகவும் சரியானது. இந்திய குடிமக்களுக்கான இந்திய இணையம், டீப் பேக்குகளை அனுமதிக்காததை உறுதிசெய்ய தொழில்துறையினருடன் நாங்கள் இணைந்திருப்போம்.
நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்க நீங்கள் 24-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். நாங்கள் தொழில்துறையினருடன் பேசுவோம். ஏற்கெனவே இருக்கும் எங்களின் தற்போதைய கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒட்டுமொத்த கட்டமைப்பைக் கொண்டு வருவோம்.
AI என்பது அதிகாரமளித்தல், வளர்ச்சி மற்றும் புதுமைக்கான கருவியாக இருக்கும்போது, இணையத்தில் போலியான தகவல்களை வெளியிட்டு சமூகத்தில் குழப்பத்தையும், சீர்குலைவை ஏற்படுத்தும் நபர்களை நாம் மறந்துவிடக் கூடாது.
AI-யால் வெளியிடப்படும் போலியான தகவல்களால் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு மிக முக்கியமான ஆபத்தாக இருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே மிகவும் கடினமாக உழைத்து ஏப்ரல் 2023-ல் தகவல் தொழில்நுட்ப விதிகளை உருவாக்கி இருக்கிறோம்.
எனினும், 1.2 பில்லியன் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு சவாலாக இல்லாமல், போலி அல்லது தவறான தகவல்கள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.