காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ராஜஸ்தானில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
“காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு நோக்கம் குடும்ப அரசியல்தான். சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புகிறார். 2015-ம் ஆண்டு அவரை பிரதமராக்க முயன்றார், முடியவில்லை. தற்போது மீண்டும் முயற்சி செய்து வருகிறார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்துவரும் ஊழல் மற்றும் அட்டூழியங்களை ஒழிக்காத வரை, அவர்களால் ஒருபோதும் ராஜஸ்தானை வளர்க்க முடியாது. பிரதமர் மோடியால் மட்டுமே ராஜஸ்தான் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்த முடியும். ராஜஸ்தானின் 40 லட்சம் இளைஞர்களை கெலாட் அரசு ஏமாற்றி இருக்கிறது.
இம்மாநிலத்தில் இரட்டை இன்ஜின் அரசு அமைந்தால் ஊழலில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைப்போம். காங்கிரஸ் கட்சியும், அசோக் கெலாட் அரசும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
ராஜஸ்தானில் ஏராளமான வினாத்தாள்கள் கசிந்தன. இவ்வளவு வினாத்தாள்கள் கசிந்த பிறகும், தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கும்படி அசோக் கெலாட் கெஞ்சுகிறார்” என்றார்.