ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில், குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும் என தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே பாலின தம்பதியினர் தங்கள் உறவினர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக அங்கீகரிக்க வேண்டும். அதன்மூலம், LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். மற்றவர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் அவர்கள் தங்கள் வாழ்கையை உறுதி செய்ய முடியும் என்று நீதிபதி கூறினார்.
இப்படிச் செய்வதன் மூலம், ஒரே பாலின உறவில் இருக்கும் நபர்களுக்கு அரசு ஒப்புதலை வழங்க முடியும். மேலும், இது அத்தகைய நபர்களின் அந்தஸ்தை பெரிய அளவிற்கு உயர்த்தும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, குடும்பக் கூட்டணி பத்திரங்களைப் பதிவு செய்யும் முறையைப் பரிசீலனை செய்ய வேண்டும் என பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
ஏற்கனவே, LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையை இறுதி செய்யும் பணியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறை ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.