ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதியாகி விட்டது. காங்கிரஸின் மந்திரவாதி இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களாக பிரதமர் மோடி ராஜஸ்தானில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மற்றும் கரௌலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,
“நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் கல்விக்காக கோட்டாவுக்கு வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களின் கனவுகளை காங்கிரஸ் கட்சி பலமுறை அழித்துள்ளது.
அனைத்துத் தேர்வுகளுக்கும் வினாத் தாள்களை காங்கிரஸ் விற்றுள்ளது. வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம்.
கோட்டாவில் ஐ.ஐ.ஐ.டி. வளாகமும் திறக்கப்பட்டுள்ளது. 1 ஜி.பி. டேட்டாவின் விலை ரூ.300 என்றால், இன்றைய நிலையை கற்பனை செய்து பாருங்கள்? பா.ஜ.க. ஆட்சியில் டிஜிட்டல் புரட்சியால் நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.
நான் பிரதமராவதற்கு முன்பு முன்பு இந்தியாவில் 2 மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தது. இன்று இந்தியாவில் 200 செல்போன் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்பட்டது. இன்று 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை.
இதன் மூலம் பல நூறு கோடி நடுத்தர மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். டிசம்பர் 3-ம் தேதி ராஜஸ்தானில் ஆளும் கட்சி மாறும். அப்போது கோட்டாவின் விமான நிலைய கனவும் நனவாகும்.
ராஜஸ்தானில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸின் மந்திரவாதி மற்றும் டெல்லியைச் சேர்ந்த பாசிகார் ஆகியோர் பொய் சொல்வதில் வல்லுநர்கள். ராஜஸ்தானிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறுவது உறுதி. காங்கிரஸின் மந்திரவாதி இன்னும் சில நாட்கள் மட்டுமே முதல்வர் நாற்காலியில் இருப்பார்” என்றார்.