ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டன என்று குற்றம்சாட்டினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தானில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டன. ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு, அரசு பணி நியமனங்கள் அனைத்திலும் ஊழல் செய்துள்ளது. இது உங்கள் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
இந்த மோசமான காங்கிரஸ் அரசை மாற்ற ஜனநாயகம் உங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. சில சமயங்களில் சிறு தவறும் உங்களை 5 ஆண்டுகள் துன்பத்தில் ஆழ்த்தலாம். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் வேகமாக செயல்படுத்த ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை விரட்டுவது முக்கியம்.
காங்கிரஸின் நம்பிக்கை எங்கிருந்து முடிகிறதோ, அங்கிருந்துதான் மோடியின் உத்தரவாதங்கள் தொடங்குகின்றன. நம் நாட்டில் கோடிக்கணக்கான ஆதிவாசிகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் உதவவில்லை. ஆனால், பா.ஜ.க. அவர்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி, ஆதிவாசிகளின் நலனுக்கான பட்ஜெட்டை அதிகப்படுத்தியது.
ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை மறு ஆய்வு செய்து மக்கள் நலனுக்கான முடிவுகள் எடுக்கப்படும். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அதிகாரிகளை ஏமாற்றி இருருக்கிறது.
அரசு அதிகாரிகளின் பணம் மாதக்கணக்கில் அரசிடம் தேங்கிக் கிடக்கிறது. இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை” என்றார்.