அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி, காலிஸ்தான் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்கள், இந்தியாவில் இருக்கும் சீக்கியர்களை தூண்டி விட்டு வருகிறார்கள்.
மேலும், அந்நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதோடு, இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது கடந்த மார்ச் 19 மற்றும் ஜூலை 2-ம் தேதிகளில் தாக்குதல் நடத்தி தீவைக்கப்பட்டது.
இது தவிர, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டிருந்த இந்தியக் கொடி கீழே இறக்கி அவமதிக்கப்பட்டது. இதனிடையே, காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சூழலில், நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்கள் யாரும் பயணிக்க வேண்டும். ஆபத்து காத்திருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இது தொடர்பாக, குர்பத்வந்த் சிங் பன்னூன் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 14 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் மோகா, ஜலந்தர், லூதியானா, குருதாஸ்பூர், மொகாலி மற்றும் பாட்டியாலாவிலும், ஹரியானா மாநிலம் குருஷேத்திரா மற்றும் யமுனா நகரிலும் தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.