தெலங்கானாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இக்கட்சிகளின் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்றிருக்கும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலமாகும்.
ஆகவே, நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது பொருளாதாரம் 3.5 டிரில்லியன் டாலரில் இருந்து, 35 டிரில்லியன் டாலராக உயரும். இதற்கான பணியை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.
9 ஆண்டுகளுக்கு முன்பு 10-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியிருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவோம்.
காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியா பலவீனமான பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தது. தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறிவருகிறது. இந்த வளர்ச்சிப் பயணத்தில் தெலங்கானாவும் இணைய விரும்புகிறது.
தெலங்கானாவிலும் நேர்மையான அரசால் மக்கள் வருமானம் மற்றும் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும். இப்பணியை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி காரணமாக சந்திரசேகர ராவ் மீது தெலங்கானா மக்கள் கோபமாக இருக்கின்றனர். ஆகவே, வரும் தேர்தலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தோல்வி அடைவார்” என்றார்.