பீகார் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதியைமுறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) 31 இடங்களில் அதிரடி சோதனை யைநடத்தியது.
பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக, பீகாரில் மாவோயிஸ்ட்களில் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை 86 போலீஸார் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தங்களது உறுப்பினர்களை புதுப்பிக்கும் சதியில் மாவோயிஸ்ட்கள் ஈடுபடுவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவுரங்காபாத், ரோஹ்தாஷ், கைமூர், கயா மற்றும் சரண் (சாப்ரா) ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய நபர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் வீடுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய 27 பேரின் இருப்பிடங்களிலும் இச்சோதனை நடந்தது. இச்சோதனையில், 2 நாட்டுத் துப்பாக்கிகள், 3.53 லட்சம் ரொக்கம், மொபைல் போன்கள், சிம் கார்டுகள், எஸ்.டி. கார்டுகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.