சுமார் 100 கோடி ரூபாய் நகைக்கடை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு பிரணவ் ஜூவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு சென்னை, மதுரை, நாகை, புதுச்சேரி, உள்ளிட்ட 8 இடங்களில் கிளைகள் செயல்பட்டு வந்தன.
கவர்ச்சிகர விளம்பரங்கள் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக அந்த நிறுவனத்திற்கு குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 19-ந் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடை தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
இந்த மாத தொடக்கத்தில் உரிமையாளர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், அதிக வருமானம் தரும் தங்க முதலீட்டுத் திட்டம் என்ற போர்வையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 100 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. வருமானம் வரவில்லை என்பது மட்டுமல்லாமல், முதலீடு செய்யப்பட்ட தொகையும் முதலீட்டாளர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த நகைக்கடையின் பிராண்ட் அம்பாசிடர் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.