கடந்த 2006 -ம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டு வரை தமிழக கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பொன்முடி பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, அவர்களது உறவினர் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012 -ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், எம்பியுமான கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, இந்த வழக்கை, 12 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன், ஜெயசந்திரன், சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜரானார்கள்.
இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்ற பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 22 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.