டீப் ஃபேக் வீடியோக்கள் தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், டீப் ஃபேக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் தகவல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரபல நடிகைகள் கஜோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் குறித்த ஆபாச போலி வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கவலை தெரிவித்தனர். மேலும், போலி வீடியோக்கள் தொடர்பாக நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சமூக வலைத்தள நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, டீப் ஃபேக் வீடியோக்களுக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், போலி வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், நடவடிக்கை எடுக்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், “சமூக வலைத்தளங்களால் தகவல் தொழில்நுட்ப விதிகள் மீறப்படுவது குறித்து பயனர்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணையதளம் ஒன்றை உருவாக்கும்.
ஐ.டி. விதிகளை மீறுவது குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்யும். மேலும், டீப் ஃபேக் புகைப்படத்தை வெளியிட்ட நபரை கண்டுபிடித்த உடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை கண்காணிக்க தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றியமைக்க சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு 7 நாட்கள் கெடு வழங்கப்படுகிறது. இன்று முதல் தகவல் தொழில்நுட்ப சட்டங்களை மீறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.