நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகப் பொது மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல பயந்து சிலர் வீடே கதி எனக் கிடக்க, பலரும் இரவு நேரத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை பந்தலூர் பஜாரை ஒட்டியுள்ள ரிச்மவுண்ட் பகுதியில் உள்ள டாக்டர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் எஸ்டேட்டின் பங்களாவில் மர்ம உருவம் ஒன்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.
அந்த மர்ம உருவத்தைத் பார்த்த அலறிய வீட்டில் உள்ளவர்கள், இது குறித்து உடனே போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை செய்தபோது, அது கரடி எனத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், கரடியை தீப்பந்தத்துடன் துரத்தியுள்ளனர்.
இதனிடையே, கரடியைப் பிடிக்கப் பங்களவையொட்டி கூண்டு வைத்து கண்காணிக்கவும், இரவு நேரத்தில் கூடுதல் வனப்பணியாளர்களை அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உயிர்கள் பலியாகும் முன்பு வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.