பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில், கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் என்.பாசுரங்கன், அவரது மகன் அகில்ஜித் ஜேபி ஆகியோரை அமலாக்க இயக்குனரகம் கைது செய்திருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மாரநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
அப்போது, வங்கியின் நிர்வாகக் குழுத் தலைவர் பாசுரங்கன் தலைமையில் வங்கி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறியது. மேலும், முதற்கட்ட விசாரணையில் 57 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் வங்கிக்கு பாரிய சொத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
மேலும், அமலாக்கத்துறை விசாரணையில், மாரநல்லூர் க்ஷீர வியாவ்சய சங்கம் லிமிடெட் நிறுவனத்திற்கு, கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கி 2.04 கோடி ரூபாய் கடன் வழங்கியது தெரியவந்தது. பிறகு, க்ஷீர வியாவ்சய சங்கம் லிமிடெட்டின் சொத்துக்களை பாசுரங்கன் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் அடமானம் வைத்து பல கோடி கடன்களை பெற்று மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
இது தவிர, நிலுவையில் உள்ள கடன்கள் தொடர்பாக கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில்தான், 2002-ம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ், பாசுரங்கன் மற்றும் அவரது மகன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.