இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே இரசாயன ஆலையில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத ஆசிட் டேங்க் திடீரென வெடித்தது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள முசிறி பகுதியில், சன்பிக்ஸ் என்ற தனியார் இரசாயானத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு இரசாயனங்கள் மற்றும் ஆசிட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஆசிட் தேக்கி வைக்க 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகள் உள்ளன.
இந்த நிலையில், தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் பாலி அலுமினியம் குளோரைடு ஆசிட் தேக்கி வைக்கப்பட்டிருந்த இராட்சத டேங்க் வெடித்தது.
இந்த ஆசிட் தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆசிட்டில் இருந்து வரும் நச்சு புகை அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால், தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அப்பகுதி வழியகச் சென்றவர்களுக்கு கண் எரிச்சல், சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டது.
இந்த ஆசிட்டில் நச்சுத் தன்மை குறைவாக இருந்ததால், தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புக் குழுவினர், சுவாசக் கருவிகளை அணிந்து கொண்டு, ஆசிட்டின் மீது தண்ணீரை அடித்தும், எம் சாண்டைக் கொட்டியும் ஆசிட்டின் வீரியத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விபத்துக்குள்ளான தொழிற்சாலையை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் இரவிச்சந்திரன் நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.