ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் 74% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களில் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பதற்றம் நிறைந்த 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் கடந்த 7-ம் தேதி நடந்தன.
தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்காக வாக்குப்பதிவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவும் கடந்த 17-ம் தேதி நடந்தன.
இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் 74.13% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5.25 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், 74.13 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது.
மொத்தமுள்ள 51,507 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக 69,114 காவலர்கள், 32,876 ராஜஸ்தான் ஊர்க்காவல் படையினர், வனக்காவலர்கள் மற்றும் ஆர்.ஏ.சி. பணியாளர்கள், 700 கம்பெனி சி.ஏ.பி.எஃப். வீரர்கள் என மொத்தம் 1,02,290 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.