நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் 15 அமர்வுகளாக நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த 9-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பொதுவாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகளாக நடைபெறும். ஆனால், தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் கூட்டத்தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. வழக்கமாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்.
ஆனால், டிசம்பர் 3-ம் தேதி மேற்கண்ட 5 மாநிலங்களில் பதிவாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்படவிருக்கிறது. ஆகவே, ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த கூட்டத்தொடரில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, தேர்தல் ஆணையம் நியமனம் தொடர்பாக மசோதா நிலுவையில் இருந்து வருகிறது. இதுவும் இக்கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். மேலும், நிலுவையிலுள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொள்ளும்.
அதோடு, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.