தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருப்பதிக்கு வருகை தருகிறார். அங்கு, ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்துக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றனர். இதனால், இம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், இன்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, மாலை திருப்பதிக்கு வருகிறார்.
தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி மற்றும் அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து, சாலை மார்க்கமாக திருமலைக்கு வரும் பிரதமர் மோடி, அங்குள்ள வி.ஐ.பி. விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர், நாளை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பிறகு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, மத்திய, மாநில உளவுத்துறை போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரும் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
மேலும், பிரதமர் மோடி தங்கவிருக்கும் வி.ஐ.பி. விருந்தினர் மாளிகை முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதோடு, ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.