சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளச்சேரி என்பதற்கு என்ன அர்த்தம்? வேள ஏரி அல்ல. வேளச்சேரி தான். அதைப்போல அரசு ரெக்கார்டிலும், அந்த வார்த்தை உள்ளது. எனவே நான் பேசியதில் தவறு இல்லை.
பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அழகு என்று அர்த்தம். அவ்வாறு நான் பேசுவது தவறா? இதனால், நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். நான் பேசியது ஒன்று; அதைத் திரித்து தவறுதலாக கூறுகின்றனர். மணிப்பூர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என முதலில் கூறியது நான் தான் என்றார்.
என் சமூக வலைதளத்தில் திமுகவுக்காக பதிவு போட்டிருந்தேன். ஆனால் காங்கிரசார் என் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்கின்றனர். திமுகவுக்காக காங்கிரஸ் பொங்கி வர வேண்டிய அவசியம் என்ன? என்றும் குஷ்பு கேள்வி எழுப்பினார்.
மணிப்பூர் சம்பவத்திற்கு, தேசிய மகளிர் ஆணையம், மே மாதமே நடவடிக்கை எடுத்து விட்டது. நடிகை திரிஷா விவகாரத்தில் புகார் வந்த பின், தான் நடவடிக்கை எடுத்தோம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த நவம்பர் வரை, 450 பட்டியல் இனப் பெண்களுக்கு எதிராக பாதிப்பு நடந்து உள்ளதாக, எங்கள் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. அதில் எத்தனை புகார்களுக்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குரல் கொடுத்துள்ளனர் என்றும் அவர் வினவினார்.
தேசிய மகளிர் ஆணையம் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால், தற்போது நான் உறுப்பினரான பின் தான், தேசிய மகளிர் ஆணையத்தை பற்றி எல்லாரும் பேசுகிறீர்கள். இதுவரை பேசாதது ஏன்? என குஷ்பு கேள்வி எழுப்பினார்.