சொத்துக் குவிப்பு வழக்கில், ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி, சட்டவிரோதமாக 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதோடு, அதே அளவுக்கு அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, கடந்த 2012-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் 11 குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், இவ்வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீன் வாங்கி இருக்கிறார்.
இந்த சூழலில், ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது கட்சியைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் ரகு ராமகிருஷ்ண ராஜுக்கும் இடையே நீண்ட காலமாகக் கருத்து முரண்பாடு நிலவுகிறது.
இந்த நிலயைில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ரகு ராமகிருஷ்ண ராஜு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், “கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் 11 குற்றப்பத்திரிகைகளை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. ஜெகன் தனது பல்வேறு நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார்.
மேலும், அதே அளவுக்கு அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். எனினும், இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை, எந்தவொரு முன்னேற்றமோ, நடவடிக்கையோ இல்லாமல் ஜெகன் மோகன் ரெட்டியால் முடங்கிக் கிடக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் ஆா்வம் காட்டவில்லை. ஆகவே, இந்த வழக்கில் ஜெகனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருக்கிறார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபே எஸ்.ஓகா, பங்கஜ் மிட்டல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு தொடா்பாக பதிலளிக்கும்படி ஜெகன்மோகனுக்கும், சி.பி.ஐ.க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.