அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது ஆளுநர்களின் கடமை என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஆளுநர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்த தீவிரவாதிகளை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
இதை ஆளுநர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை என அவர் தெரிவித்தார்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை என அவர் கூறினார்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என்பதே விருப்பம் என்றும் சிபி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.